உன்னையன்றி வேறே கெதி
Unnaiyandri Verae
உன்னையன்றி வேறே கெதி
ஒருவரில்லையே ஸ்வாமீ!
அன்னை தந்தை உற்றார் சுற்றார் ஆருமுதவுவரோ?
அதிசய மனுவேலா! ஆசை என் யேசு ஸ்வாமீ!
பண்ணின துரோகமெல்லாம் எண்ணினா லெத்தனைகோடி
பாதகத்துக் குண்டோ எல்லை, பரதவித்தேனே தேடி,
கண்ணினாலுன் திருவடிக் காண நான் தகுமோதான்?
கடையனுக்கருள்புரி மடியுமுன் யேசு ஸ்வாமீ!
அஞ்சியஞ்சித் தூர நின்றென் சஞ்சலங்களை நான் சொல்லி,
அலைகடல் துரும்புபோல் மலைவு கொண்டே னானையோ
கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த வாஞ்சகண் முகம்பாராய்க்
கிட்டி என்னிடம் சேர்ந்து க்ருபைவை யேசு ஸ்வாமீ
எத்தனை கற்றாலும் தேவ பக்தியேது மற்ற பாவி
எவ்வளவு புத்திகேட்டும் அவ்வளவுக்கதி தோஷி,
பித்தனைப் போல பிதற்றிக் கத்தியே புலம்புமேழைப்
பேதையைக் கடைத்தேற்றிப் பிழைக்கவை யேசு ஸ்வாமீ!
கள்ளனாம் கபடனென்னைத் தள்ளிவிட்டாலாவதென்ன,
கல்லைப்போல் கடினங்கொண்ட கர்ம சண்டாளன் பாழும்
உள்ளமுங்கரைந்தே உன்றன் உயர் சிலுவையினன்பால்
உலையிலிட்ட மெழுகாய் உருகவை யேசு ஸ்வாமீ!

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter