நெஞ்சமே வீணாய் சோர்ந்து போகாதே தஞ்சம் இயேசு இருக்கையில் தளர்ந்துவிடாதே
சோதனைப் பலவும் சூழ்ந்திடும் நேரம்
வேதனை விதம்விதம் வந்திடுங்காலம்
தீதனைத்தும் திருச்சிலுவையில் தொங்கும்
நாதனை நினைத்திடில் நாசமாய்ப் போகும் - நெஞ்
பெற்றவரும் பெண்டு பிள்ளைகளும் மிக
உற்றவரும் உயிர் தோழர்களானோரும்
பற்றற்றவராய்ப் பழகிடும் போதும்
மற்றவர் செய்கையால் மனங்கலங்காதே - நெஞ்
கஷ்டங்கள் வருங்கால் களிப்பாக எண்ணு
இஷ்டமுடன் ஜெபம் எந்நேரமும் பண்ணு
நஷ்டங்கள் வந்தாலும் நலமென்று சொல்லு
துஷ்டனின் சூட்சியை தூயனால் வெல்லு நெஞ்
நியாயமில்லாமல் குற்றம் காண்போர்கள்
நியாயத்தீர்ப்பின் நாள் வெட்கங்கொள்வார்கள்
தூயவன் முன் உன் சிறு இருதயம்
மாயமும் மாசுமில்லாதானால் போதும் - நெஞ்
செய்ததும் சொன்னதும் இல்லென்று மறுப்பார்
செய்யாததும் சொல்லாதும் ஆம் என்று உரைப்பார்
பொய்யிலும் புரட்டிலும் புதைந்தது உலகம்
மெய்யுடை யான் இயேசு மீது வை பாரம் - நெஞ்
இயேசுவின் சிந்தை இருந்திட வேண்டும்
இயேசுவின் ஆவியில் இயங்கிட வேண்டும்
இயேசுவைப்போல் எல்லாம் சகித்திட வேண்டும்
இயேசுவின் கிருபையைப் பெற்றிடவேண்டும் - நெஞ்