அறுவடை மிகுதி ஆளோ இல்லை அன்பரின் கதறல் கேட்டிடுதே
நானிலம் முழுவதும் நானூறு கோடி
நரகத்தின் வழியை நாடிடுதே
இயேசுவின் அன்பு நம்மையும் நெருக்க
எழும்பிடுவோம் நாம் வாலிபரே - அறுவடை
அமைதி இல்லை நம்பிக்கை இல்லை
அழுகையும் கண்ணீர் வாழ்க்கையிலே
உறக்கமும் இல்லை முழு உணவில்லை
உணர்த்திடுவீர் இதை வாலிபரே - அறுவடை
மிருகம் போல் உழைத்தும் வறுமையின் தொல்லை
வாதையில் வாடிடும் கூட்டத்தைப் பார்
ஆற்றுவாரில்லை தேற்றுவாரில்லை
அன்பினைக் காட்டவும் யாருமில்லை - அறுவடை
நம்பிக்கையற்ற கல்லறை நாடி
நாளினில் லட்சங்கள் செல்கிறதே
திறப்பினில் நிற்க ஆளில்லை என்று
திகைத்துக் கதறிடும் இயேசுவைப் பார் - அறுவடை
அலறிடும் பிள்ளைகள் குரலினைக் கேட்டு
அழுவதன்றி வேறென்ன செய்வார்
யாரை அனுப்புவேன் யார் போவார் என்றார்
கதறலை என் உள்ளம் கேட்டிடாதோ - அறுவடை
அன்பரே வந்தேன் அழுகையைக் கண்டேன்
அர்ப்பணித்தேன் எந்தன் வாழ்க்கையினை
பாரினில் கழுதையாய் சுமந்தும்மை சென்று
பாதத்தில் விடுவேன் என் ஜீவனையே - அறுவடை