Nenjam Gethsemaneku Nee நெஞ்சமே கெத்சேமனேக்கு நீ
நெஞ்சமே கெத்சேமனேக்கு நீ நடந்துவந்திடாயோ
சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார்
ஆத்துமத்தில் வாதை மிஞ்சி அங்கலாய்த்து வாடுகின்றார்
தேற்றுவார் இங்காருமின்றித் தியங்குகின்றார் ஆண்டவனார்
தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகி
ஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே
அப்பா பிதாவே இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால்
எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே
ரத்த வேர்வையாலே தேகம் மெத்த நனைந்திருக்குதே
குற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை ஏனோ
வானத்திலிருந்தோர் தூதன் வந்தவரைப் பலப்படுத்தத்
தான் சஞ்சலத்தோடு முழந்தாள்நின்று வேண்டுகின்றார்
தாங்கொணா நித்திரைகொண்டு தன் சீஷர்கள் உறங்கிவிழ
ஆங்கவர் தனித்திருந்து அங்கலாய்த்து வாடுகின்றார்